••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?
எண்ண ஜுவாலைகள்
எரித்த உயிரின் சுவர்களை
எல்லாக் கரங்களாலும்
தொட்டுக் குளிர்விக்கும்
நேச நிழலது ;
நான் போகிறேன்
யார் வருகிறீர்கள் ?
புறம் பேசும் தீக்குணத்தை
மௌன மருந்திட்டு
மாற்றியனுப்பும்
சிகிச்சைக்குக் போகிறேன்
வருபவர்கள் வரலாம் !
வெறுப்பின் முதுகை
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம்
அன்பே சத்தியம்
அன்பே அத்தனையுமென
நெஞ்சில் எழுதியனுப்பும்
மரக்கவிஞனின்
நிழற்குடிசைக்குப் போகிறேன்
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !
நெஞ்சுக்குள் நஞ்சேற்றும்
பொறாமைகளைக்
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும்
மௌனப் பெருநிழலில்
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?
பழிக்கும் வஞ்சமும்
குற்றங்கானும் கூட்டமும்
குரங்காகவே இருக்கும்
மனிதர்களே இல்லாத
மரநிழல் ஒன்றிருக்கிறது
கொஞ்சம் போய்
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !
அறிவுச்செருக்கை
கன்னத்தில் அறைந்து
அமைதியே பேரறிவு
மௌனமே மாதவம்
நிசப்தமே நிலையான நிலையென
உணர்த்தும் குளிர்நிழல்
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில்
கொஞ்ச நேரம் அங்கு
போய்விட்டு வருகிறேன் !
ஆயிரம் ஆட்டமாடி அடங்கி
அமர்ந்திருக்கிறானே
யாரோ ஒருவன்...
அவன் உணரும்
நிம்மதியின் நிழல்
எனக்கும் வேண்டும்
நான் அவனிருக்கும்
நிழலுக்குப் போகிறேன் !
கோடிகளில் மூழ்கிப் போன
பணப்பிணங்கள் யாரும்
என்னோடு வரவேண்டாம்
கொஞ்சம் அன்பிருப்பினும்
கொட்டிச் செலவழிக்கும்
ஏழைகள் வாருங்கள் !
என்னோடு வாருங்கள்
அது ஏழைகளுக்கான மரநிழல்
அன்பானவர்களின் வாஞ்சை நிழல்
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !
நான் போகிறேன்
என்னோடு வருபவர்கள் வாருங்கள்
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி
very nice
ReplyDelete