Friday, June 7, 2013

அதன் பின்னும் நேசிப்பேன்


எத்தனை வெறுப்பை சுமர்த்தி 
நீங்கள் என் பாரம் கூட்டினாலும் 
மனமுடைந்து போகமாட்டேன்...

மிரட்டி நிற்கும் 
வெறுப்பின் பயமின்றி

உயிரை 
புரட்டிப் போடும் புறக்கணிப்பின் 
கோரமுகம் பார்த்து ரசித்து...

என் வழியில் இன்னும் கொஞ்சம்
ஆழமாய் நேசித்தே கிடப்பேன்...

நீங்கள் விரும்பினால் அதன் பின்னும்
என்னுடன் இருக்கலாம்...

அதன் பின்னும் நேசிப்பேன் !

பூக்களைப் போல் வாழ்கிறேன்






















எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும் 
எந்த முரணுமில்லை 
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக் 
குளிர்விக்கும் 
மஞ்சள் பூக்களின் புன்னகை 
எவ்வளவு அழகோ 
அவ்வளவு அழகாய் 
அமைதியாய் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி
Inspired from a thought of Kahlil Gibraan.

மௌனப் பெருநிழல்























••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?


எண்ண ஜுவாலைகள் 
எரித்த உயிரின் சுவர்களை 
எல்லாக் கரங்களாலும் 
தொட்டுக் குளிர்விக்கும் 
நேச நிழலது ;
நான் போகிறேன் 
யார் வருகிறீர்கள் ?

புறம் பேசும் தீக்குணத்தை 
மௌன மருந்திட்டு 
மாற்றியனுப்பும் 
சிகிச்சைக்குக் போகிறேன் 
வருபவர்கள் வரலாம் !

வெறுப்பின் முதுகை 
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம் 
அன்பே சத்தியம் 
அன்பே அத்தனையுமென 
நெஞ்சில் எழுதியனுப்பும் 
மரக்கவிஞனின் 
நிழற்குடிசைக்குப் போகிறேன் 
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !

நெஞ்சுக்குள் நஞ்சேற்றும் 
பொறாமைகளைக் 
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும் 
மௌனப் பெருநிழலில் 
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?

பழிக்கும் வஞ்சமும் 
குற்றங்கானும் கூட்டமும் 
குரங்காகவே இருக்கும் 
மனிதர்களே இல்லாத 
மரநிழல் ஒன்றிருக்கிறது 
கொஞ்சம் போய் 
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !

அறிவுச்செருக்கை 
கன்னத்தில் அறைந்து 
அமைதியே பேரறிவு 
மௌனமே மாதவம் 
நிசப்தமே நிலையான நிலையென 
உணர்த்தும் குளிர்நிழல் 
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில் 
கொஞ்ச நேரம் அங்கு 
போய்விட்டு வருகிறேன் !

ஆயிரம் ஆட்டமாடி அடங்கி 
அமர்ந்திருக்கிறானே 
யாரோ ஒருவன்...
அவன் உணரும் 
நிம்மதியின் நிழல் 
எனக்கும் வேண்டும் 
நான் அவனிருக்கும் 
நிழலுக்குப் போகிறேன் !

கோடிகளில் மூழ்கிப் போன 
பணப்பிணங்கள் யாரும் 
என்னோடு வரவேண்டாம் 
கொஞ்சம் அன்பிருப்பினும் 
கொட்டிச் செலவழிக்கும் 
ஏழைகள் வாருங்கள் !

என்னோடு வாருங்கள் 
அது ஏழைகளுக்கான மரநிழல் 
அன்பானவர்களின் வாஞ்சை நிழல் 
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை 
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !

நான் போகிறேன் 
என்னோடு வருபவர்கள் வாருங்கள் 
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

மௌனப்பெரும்புயல்


••
மௌனப் பெரும்புயலொன்று மனதை 
சுழன்றடித்துக் கடந்து போனது ..
சப்தங்கள் சலனங்கள் நிறைந்த 
இயல்புக்கு மீண்டும் 
திரும்பி விட்டது வாழ்க்கை..
இருந்தும் வர்ணிக்க முடியாத 
தீராக்காதலை உயிர் முழுக்க 
ஓட்டிச் சென்ற புயலை 
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..
புயல் தரும் ஆறுதல்
பூமியில் எங்குமே இல்லை..
மௌனப்பெரும்புயல் மனதின்
மாபெரும்வரம்
மாபெரும் தவம் ..!
••

Be a Horse - ஒரு குட்டிக் கதை பெரிய்ய நீதி





••
வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..
••

You are blessed Soul then



••
நீ சிரித்துக் கொண்டே 
மரணித்தாலும் 
அழுது அத்தனை கண்ணீரையும் 
இழந்து மயங்கும் 
யாரோ ஒருவரின்
அன்பைப் பெற்றுவிட்டால் போதும்
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் !
••

Love is...



••
நேசித்தல் நூறு சுகம்..
நூறென்றால் ஆயிரம் 
ஆயிரமென்றால் லட்சம் 
லட்சமென்றால் கோடி !
••

Rumi Quote



••
இதயத்திலிருந்து வருகிற வார்த்தைகள் மட்டுமே 
இதயத்திற்குப் போய் சேரும் ! 
••
ரூமி

we admit when we get it


••
எல்லாம் கிடைத்ததன் பின் தான் நாம் அதைத் 
தீவிரமாய்த் தேடினோம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறோம் ! 
••

None cares the other side of a True love


••
பிரிகிற காதல், ஏற்கிற பழிக்குப் பின்னால் 
இருக்கிற தியாகங்களை யாருக்கும் கேட்க நேரமில்லை,விருப்பமில்லை ! 
••

தியாகமென்பது...


••
தியாகமென்பது 
ஒரு ஊமையின் ஆழ்மன அலறல் ! 
அன்பின் உயர்நிலை.
எத்தனை பழி சொல்லினும் 
அத்தனையும் பொறுத்தொரு 
நிசப்தப் பெருங்குரலெடுத்தலறும். 
வேறொன்றும் செய்யாது. 
தியாகமென்பது மௌனம்.
மௌனமென்பது வீரம்.
வீரமென்பது காதல்.
காதலென்பது வெற்றி .
வெற்றியென்பது
தான் தோற்று
பிறரை ஜெயிக்க வைப்பது !
••
பிரபா

Money is not all that matters



••
பணமும் பொருட்களும் கொடுத்த சந்தோஷம் அது போனதும் அதோடே போய்விட்டது.
அன்பும் காதலும் அதைக் கொடுத்த மனிதர்கள் இல்லாத போதும் நெஞ்சோடு நிலைத்து நிற்கிறது. 
••
# எது நிலை என்று உணர்ந்து வாழுங்கள்.