Showing posts with label poems of prabha. Show all posts
Showing posts with label poems of prabha. Show all posts

Friday, June 7, 2013

பூக்களைப் போல் வாழ்கிறேன்






















எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும் 
எந்த முரணுமில்லை 
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக் 
குளிர்விக்கும் 
மஞ்சள் பூக்களின் புன்னகை 
எவ்வளவு அழகோ 
அவ்வளவு அழகாய் 
அமைதியாய் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி
Inspired from a thought of Kahlil Gibraan.

மௌனப் பெருநிழல்























••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?


எண்ண ஜுவாலைகள் 
எரித்த உயிரின் சுவர்களை 
எல்லாக் கரங்களாலும் 
தொட்டுக் குளிர்விக்கும் 
நேச நிழலது ;
நான் போகிறேன் 
யார் வருகிறீர்கள் ?

புறம் பேசும் தீக்குணத்தை 
மௌன மருந்திட்டு 
மாற்றியனுப்பும் 
சிகிச்சைக்குக் போகிறேன் 
வருபவர்கள் வரலாம் !

வெறுப்பின் முதுகை 
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம் 
அன்பே சத்தியம் 
அன்பே அத்தனையுமென 
நெஞ்சில் எழுதியனுப்பும் 
மரக்கவிஞனின் 
நிழற்குடிசைக்குப் போகிறேன் 
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !

நெஞ்சுக்குள் நஞ்சேற்றும் 
பொறாமைகளைக் 
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும் 
மௌனப் பெருநிழலில் 
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?

பழிக்கும் வஞ்சமும் 
குற்றங்கானும் கூட்டமும் 
குரங்காகவே இருக்கும் 
மனிதர்களே இல்லாத 
மரநிழல் ஒன்றிருக்கிறது 
கொஞ்சம் போய் 
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !

அறிவுச்செருக்கை 
கன்னத்தில் அறைந்து 
அமைதியே பேரறிவு 
மௌனமே மாதவம் 
நிசப்தமே நிலையான நிலையென 
உணர்த்தும் குளிர்நிழல் 
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில் 
கொஞ்ச நேரம் அங்கு 
போய்விட்டு வருகிறேன் !

ஆயிரம் ஆட்டமாடி அடங்கி 
அமர்ந்திருக்கிறானே 
யாரோ ஒருவன்...
அவன் உணரும் 
நிம்மதியின் நிழல் 
எனக்கும் வேண்டும் 
நான் அவனிருக்கும் 
நிழலுக்குப் போகிறேன் !

கோடிகளில் மூழ்கிப் போன 
பணப்பிணங்கள் யாரும் 
என்னோடு வரவேண்டாம் 
கொஞ்சம் அன்பிருப்பினும் 
கொட்டிச் செலவழிக்கும் 
ஏழைகள் வாருங்கள் !

என்னோடு வாருங்கள் 
அது ஏழைகளுக்கான மரநிழல் 
அன்பானவர்களின் வாஞ்சை நிழல் 
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை 
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !

நான் போகிறேன் 
என்னோடு வருபவர்கள் வாருங்கள் 
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி